Tuesday, 8 June 2010

கனடாவுடனும் இந்தியா அணு சக்தி ஒப்பந்தம்

டொரண்டோ: டொரண்டோவில் ஜி-20 உச்சி மாநாடு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவிருக்கிறார். இம்மாநாட்டின்போது இரு நாடுகளுக்கிடையான அணு சக்தி வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

இம்மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் வரும் 26ம் தேதி கனடா செல்கிறார். அவருடன் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா, வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரும் செல்கின்றனர்.

இந்தியா ஏற்கனவே அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளுடன் அணு ஒப்பந்தம் செய்துள்ளது.

யுரேனியம் ஏற்றுமதியில் உலகிலேயே கனடா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் அணு உற்பத்திக்குத் தேவையான யுரேனியத்தை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே முடிந்துவிட்டது. ஒப்பந்தம் மட்டும் தான் கையெழுத்தாக வேண்டியுள்ளது.

நித்தியானந்தா மீதான வழக்கு - ஸ்ரீபெரும்புதூர் கோர்ட் விசாரிக்க இடைக்கால தடை செவ்வாய்க்கிழமை, ஜூன் 8, 2010,

சென்னை: நித்தியானந்தா மீது வக்கீல் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரிக்க ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த வக்கீல் செல்வமணி என்பவர், ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நித்தியானந்தா மீது வழக்கு தொடர்ந்தார்.

அதில், சுவாமி நித்யானந்தா தவறான முறையில் செயல்பட்டு இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். இதற்காக, அவர் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டு விசாரித்து கடந்த ஏப்ரல் மாதம் நேரில் ஆஜராக நித்தியானந்தாவுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் நித்தியானந்தா ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதை தொடர்ந்து 9-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் மீண்டும் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராகும் உத்தரவுக்கு தடை கேட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று நீதிபதி சி.பி. செல்வம் விசாரித்தார். விசாரணைக்குப் பின்னர் நித்தியானந்தா நேரில் ஆஜராவதற்கும், ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கும் 3 வார கால இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி வக்கீல் செல்வமணிக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
   [ Read All Comments ]   [ Post Comments ]
Related Posts with Thumbnails